search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஷ்மீர் தாக்குதல்"

    காஷ்மீரைச் சேர்ந்த வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
    ஜார்கண்ட்:

    காஷ்மீரை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்க வியாபாரி குளிர்கால ஆடைகளை விற்பனை  செய்து வருகிறார். ஜார்காண்டில் இவரும், சக வியாபாரிகளும் இணைந்து நேற்று ஆடைகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.

    அப்போது, இவர்களை சுற்றி வளைத்த 25 பேர் கொண்ட மர்ம நபர்கள், ‘ஜெய் ஸ்ரீராம், பாகிஸ்தான் ஒழிக’ என்று கோஷமிடும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர்.

    அவர்கள் கோஷமிட மறுத்ததை அடுத்து,  அந்த கும்பல் வியாபாரிகளை கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட வியாபாரிகள் போலீசாரிடம், புகார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில் வியாபாரிகள் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் பாதிப்புக்குள்ளான வியாபாரி, “காஷ்மீரை சேர்ந்தவர்களாக இருப்பது எங்கள் குற்றமா? நாங்கள் இந்தியர்கள் இல்லையா ? அவர்கள் எப்போதும் ஜெய் ஸ்ரீராம், பாகிஸ்தான் ஒழிக என்று கோஷமிடச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

    நாங்கள் நால்வரும் இரக்கமின்றி தாக்கப்பட்டோம். நாங்களும் இந்தியர்கள்தான். சட்டம் அனைவருக்கும் சமமானது. மதத்தைக் கொண்டு பாகுபாடு காட்டக் கூடாது” என ஆவேசமாக கூறுகிறார்.

    இந்த வீடியோவை பார்த்த அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், “குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு பதிவிட்டிருந்தார்.

    இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரவித்துள்ளனர்.
    இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #Terroristsplan
    புதுடெல்லி:

    இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிகை விடுத்து உள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஐஎஸ் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் உளவுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த சந்திப்பை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

    சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலைப் போல, மற்றுமொரு தாக்குதலை காஷ்மீரில் அரங்கேற்ற, இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவிக்கின்றன. #Terroristsplan 
    காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரமான ரேடார் பதிவுகளை இந்தியா இன்று வெளியிட்டது. #PakistanF16 #IndianAirForce #IAFMIG21 #MIG21Bison
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் ஏற்பட்டது. 

    அப்போது பாகிஸ்தானின் எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைந்த பாகங்களையும் இந்தியா வெளியிட்டது. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்தது. 

    நாங்கள் சுட்டு வீழ்த்தியது எப்-16 ரக போர் விமானம்தான் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்தது. எப்-16  ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் ஒப்பந்த விதிகளை மீறியது என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

    இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “ஃபாரின் பாலிசி” என்ற செய்தி இதழ், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தானிடம் எத்தனை எப்-16 ரக விமானங்கள் உள்ளது? என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என செய்தி வெளியிட்டது. 

    இதற்கு இந்திய விமானப்படை மறுப்பு தெரிவித்திருந்தது. “இருதரப்பு வான்மோதலின்போது இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் ரக விமானம், பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை நவ்ஷேரா செக்டாரில் சுட்டு வீழ்த்தியது,” என இந்திய விமானப்படை ஆணித்தரமாக கூறியுள்ளது. 

    மேலும், பாகிஸ்தான் விமானப்படையின் ரேடியோ தகவல் தொடர்பை இடைமறிப்பு செய்ததில் அந்நாட்டின் எப். 16 விமானம் ஒன்று பாகிஸ்தானில் உள்ள நிலைக்கு திரும்பவில்லை என்று பாகிஸ்தான் விமானப்படை தகவல் தொடர்புத்துறை உயரதிகாரி மைக் மூலம் தெரிவித்த கருத்தும் இதை உறுதிப்படுத்துவதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், இந்தியாவின் கருத்துக்கு வலு சேர்க்கும் புதிய ஆதாரத்தை இந்திய விமானப்படையின் துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் இன்று வெளியிட்டுள்ளார்.

    பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்திய ரேடார் பதிவுகளை செய்தியாளர்களுக்கு துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் காட்சிப்படுத்தினார். இதைவிட அதிக வலுவான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால், பாதுகாப்பு மற்றும் நாட்டின் அதிமுக்கிய ரகசியம் என்னும் வகையில் அந்த ஆதாரத்தை பொதுவெளியில் (ஊடகங்களுக்கு) பகிரங்கமாக தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #PakistanF16 #IndianAirForce #IAFMIG21 #MIG21Bison 
    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஜெய்ஷ் இ முஹம்மது இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க மேலும் ஆதாரங்களை அளிக்குமாறு பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. #Pakistanseeksevidence #Pulwamaattack
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவன் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதி மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கான ஆதாரங்களை இந்திய அரசு கடந்த மாதம் 27-ம் தேதி பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைத்து அங்கு இருக்கும் மசூத் அசார் உள்பட 22 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. மேலும், எல்லைப்பகுதியில் இயங்கிவரும் பயங்கரவாத முகாம்கள் தொடர்பாக இந்திய அரசிடம் உள்ள உளவுத்துறை தகவல்களும் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், இந்திய அரசு அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவர்கள் அனுப்பிய தகவலில் இவர்களுக்கு எல்லாம் தொடர்பு இருப்பதாக ‘கருதப்படுவதாக’ மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், ஒரு வியக்கத்தக்க முன்னேற்றமாக இந்திய அரசு முன்னர் அளித்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நடத்திய விசாரணை மூலம் அறியவந்த விபரங்களை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் தூதருடன் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் இன்று பரிமாறி கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இவ்விவகாரத்தில் பாகிஸ்தானில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்கும் வகையில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்னர் அளித்திருந்த வாக்குறுதியின்படி, புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்திருந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்நாட்டு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் இன்று இந்திய தூதரிடம் பரிமாறப்பட்டது.

    இவ்விசாரணையை மேற்கொண்டு முன்னெடுத்து செல்லும் வகையில் இந்தியாவிடம் இருந்து மேலும் சில ஆதாரங்கள் கோரப்பட்டுள்ளது என பாகிஸ்தான் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. #Pakistanseeksevidence  #Pulwamaattack
    புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி உள்ளதாக மத்திய புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். #PulwamaAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    மனித குண்டாக செயல்பட்டு இந்த தாக்குதலை நடத்தியது அகில்தார் என்ற பயங்கரவாதி என்பது தெரியவந்தது . தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட முதாசிர் கான் என்பவன் தரல் என்ற இடத்தில் பதுங்கி இருந்த போது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

    அதில்தார், முதாசிர்கான் இருவருமே ஸ்மார்ட் போன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்க தலைவர்களுடன் தொடர்பில் இருந்தனர்.

    அந்த போனுக்கு அவர்கள் அமெரிக்கா விர்ச்சுவல் சிம்கார்டை பயன்படுத்தி உள்ளனர். இதை புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். அந்த போனில் இணைய தளம், பேஸ்புக், வாட்ஸ்- அப் சேவைகளையும் பெற்று இருக்கிறார்கள்.

    இந்த போன்களுக்கான சிம்கார்டை அமெரிக்காவில் இருந்து யாரோ வாங்கி பயங்கரவாதிக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க மத்திய புலனாய்வுத்துறை அமைப்பினர் அமெரிக்க உதவியை நாட உள்ளனர்.



    மும்பையில் அதேபோல 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோதும் அவர்கள் வெளிநாட்டு சிம்கார்டை பயன்படுத்தி உள்ளனர்.

    அவற்றை இத்தாலி நாட்டில் இருந்து பெற்று இருந்தனர். இந்த சிம்கார்டுகளை இத்தாலியில் உள்ள ஒரு நிறுவனம் மூலமாக ஜாவீத் இக்பால் என்பவர் வாங்கி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இத்தாலி போலீசார் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

    இதேபோல இப்போதும் பயங்கரவாதிகளுக்கு உதவியவர்களையும் கண்டுபிடிக்க புலனாய்வுத் துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். #PulwamaAttack
    இந்தியா குண்டுவீச்சில் இருந்து பயங்கரவாதிகளை இம்ரான்கான் அரசு பாதுகாக்கிறது என்று பெனாசிர் மகன் குற்றம் சாட்டியுள்ளார். #ImranKhan

    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடியால் பல பயங்கரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது.

    இதுகுறித்து மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளை கைது செய்து இருப்பதாக இம்ரான் கான் அரசு சொல்கிறது. இதை நம்ப நான் தயாராக இல்லை. பயங்கரவாதிகள் கைது செய்யப்படவில்லை. மாறாக இந்திய போர் விமானங்களின் குண்டு வீச்சில் இருந்து பாதுகாக்க அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், பயங்கரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அது எந்த விதத்தில் முடக்கப்பட்டுள்ளது. மு‌ஷரப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் நடந்தது என்ன? அவர் பணத்துக்காக வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார்.

    பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது இந்தியாவுடன் நடத்திய பேச்வார்த்தைக்கு துரோகம் இழைப்பதாகும் என்றார்.

    முன்னதாக டுவிட்டரில் பிலாவல் பூட்டோ செய்தி வெளியிட்டார். அதில் இம்ரான் கானுக்கு சரமாரியாக கேள்வி விடுத்தார்.

    தேர்தல் நேரத்தில் ஆதரவு அளித்த பயங்கரவாதிகளுக்கு இம்ரான்கான் அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் ஆதரவாக செயல்படுகின்றனர். அவர்களை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற தயாரா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார். #ImranKhan

    மசூத்அசார் விவகாரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #MasoodAzharcase #rahulgandhi #pmmodi #kashmirattack

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை கடந்த 26-ந்தேதி குண்டு வீசி அழித்தது.

    இந்த சூழ்நிலையில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கவாதியாக அறிவிக்ககோரி அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தன.

    10 நாட்களுக்குள் ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தால் தீர்மானம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இருந்தது.

    எந்த உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் கெடு நேரம் முடியும் தருவாயில் சீனா தொழில் நுட்ப ரீதியில் சில கேள்விகளை முன் வைத்து தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்துவிட்டது.

    மசூத்அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தடுப்பது இது 4-வது முறையாகும்.


    இந்த சம்பவத்தில் சீனா குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி இருப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

    பலவீனமான மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார். இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கை பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை.

    மோடியின் சீன தூதரக கொள்கை என்பது:

    1. குஜராத்தில் ஜின் பிங்குடன் ஊஞ்சலாடினர்.

    2. டெல்லியில் ஜின்பிங்கை கட்டி அணைத்தார்.

    3. சீனாவில் ஜின் பிங்குக்கு தலை குனிந்து வணங்கினார்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

    மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சியை சீனா தடுத்து விட்டது. இதுகுறித்து ஒவ்வொரு இந்தியர் மனதிலும் கேள்வி எழுகிறது. அப்படியென்றால் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி ஊஞ்சலாடியதில் என்ன பயன் இருக்கிறது.

    கொடூரமான, ரத்தத்தை உறைய வைக்கும் கொலைகளை நடத்திய பயங்கரவாதி பா.ஜனதாவால் மீண்டும் தப்பி இருக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MasoodAzharcase #rahulgandhi #pmmodi #kashmirattack

    தரையிலும் தண்ணீரிலும் செல்லக்கூடிய அதிநவீன ரோந்து கப்பல் கடலூர் வந்தது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    கடலூர்:

    காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பயங்ரவாதிகள் தாக்குதலில் 40-க் கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ராணுவத்தினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அதிநவீன பாதுகாப்பு ரோந்து கப்பல் சென்னையிலிருந்து புறப்பட்டு இன்று கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரைக்கு வந்தது. அதில் கடற்படை வீரர்கள் 5 பேர் இருந்தனர். கடலூர் கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்- இன்ஸ்பெக்டர் சிவகுரு நாதன் மற்றும் போலீசார் அவர்களை வரவேற்றனர். இந்த கப்பலை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    கடலூருக்கு வந்த இந்த கப்பல் தண்ணீரிலும் மற்றும் தரையிலும் செல்லக் கூடியது ஆகும். இந்த கப்பல் மூலம் கடற்கரை மற்றும் கடற்கரை ஓரமாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு கடற்கரைப் பகுதியில் கடற்படை வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற எண்ணம் ஏற்பட்டதால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. #Kashmir

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலகோட்டில் இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இச்சம்பவம் நடந்து 2 வாரம் ஆகிறது

    இருந்தும் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி மற்றும் ராவல்பிண்டி ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் தனது ராணுவத்தை குவித்து வைத்துள்ளது.

    அங்கு ‘எப்-16’ ரக போர் விமானங்கள் மற்றும் விமானப்படை வீரர்களும் பெருமளவில் தயாராக உள்ளனர். இந்த தகவலை அமெரிக்க செயற்கை கோள் எடுத்த போட்டோக்கள் தெரிவிக்கின்றன.

    இந்தியா மீண்டும் குண்டு வீசி சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அமெரிக்கா மற்றும் ஜோர்டானிடம் இருந்து வாங்கிய ‘எப்-16’ ரக போர் விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.

    மேலும் தனது வான் வழியில் விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத்தில் இருந்து வடக்கில் உள்ள ஸ்காடு வரை எல்லை பகுதியில் ராணும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    அங்கு ரேடார் உள்ளிட்ட ராணுவ பாதுகாப்பு தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #Kashmir

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதையடுத்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir

    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இந்த சம்பவத்துக்கு பிறகு இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் எல்லையில் உள்ள 80 கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 பேர் பலியானார்கள். 100 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் இன்று அத்துமீறலில் ஈடுபட்டது.

    பூஞ்ச் மாவட்டத்தில் 4 இடங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அதிகாலை 4.30 மணி முதல் தாக்குதல் நடத்த தொடங்கினர். கிராமங்கள், ராணுவ நிலைகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. காலை 7.30 மணி வரை இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரியவில்லை. #PakistanCeasefireViolation #JammuAndKashmir

    இந்திய எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம்:

    தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீசார் 40 பேர் உயிரிழந்தனர்.

    இச்சம்பவத்தை அடுத்து இந்திய விமானப்படை தீவிரவாதிகள் பயிற்சி முகாம்களை போர் விமானம் மூலம் குண்டு வீசி அழித்தது. நேற்று இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டியடித்தபோது சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார்.

    இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் வான்வழி, கடல்வழி, தரைவழி பாதுகாப்புகளை நவீன ரேடார் கருவிகள், கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

    அணுமின் நிலையத்துக்குள் பணிக்கு செல்லும் அனைத்து வடமாநில ஊழியர்களும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    ஒப்பந்த பணிக்கு வருவோர் அனைவரும் அவரவர் குடியிருக்கும் பகுதி காவல் நிலையத்தில் நன்னடத்தை சான்று வாங்கி வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நகரியம் பகுதியில் குடியிருக்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி முகாம் மற்றும் தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு கருதி உள்ளே நுழையும் அனைத்து ஊழியர்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பி வருகிறார்கள்.

    புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த 40 துணை ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அறிவித்துள்ளார். #PulwamaAttack #CRPFJawans
    மும்பை:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ந் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    வீர மரணம் அடைந்த அந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய-மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி உள்ளன. மேலும் அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வீர மரணம் அடைந்த 40 வீரர்களின் குடும்பத்தினருக்கு திரைப்படத் துறையினரும் நிதி உதவிகளை வழங்கி வருகிறார்கள். நடிகர் அமிதாப்பச்சன் ரூ. 2.1 கோடி நிதி உதவி வழங்கினார்.



    நடிகர் அக்ஷயகுமார் ரூ.5 கோடி வழங்கினார். சல்மான்கான், கிரிக்கெட் வீரர் சேவாக், குத்துச்சண்டை வீரர் வீரேந்திரசிங் ஆகியோரும் நிதி உதவி வழங்கினார்கள்.

    இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். அவர் ரூ.1 கோடி கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த 24-ந் தேதி லதா மங்கேஷ்கரின் தந்தை இறந்த தினமாகும். இதையொட்டி ரூ.1 கோடி நிதி உதவியை அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். #PulwamaAttack #CRPFJawans #LataMangeshkar 

    ×